 |
| அன்றைய டெப்லட் |
டெப்லட் கணனி என்ற விடயம் தொடர்பில் பல தசாப்தங்களாக பேசப்பட்டு வந்தபோதிலும் அதன் முழுமையான ஒரு வடிவம் எம்மிடையே கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்தே உலவ ஆரம்பித்துள்ளது. ஆனால் 9ஆம் நூற்றாண்டிலேயே ‘டெப்லட் கணனி’ என்ற விடயம் இருந்துள்ளதென்கிறது புதிய அகழ்வாராய்ச்சி ஒன்று.
சுமார் 1200 வருடங்கள் பழைமையான டெப்லட் கணனியை ஒத்த பொருளொன்றை துருக்கியைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்தான்புல் நகரின் யெனிகபி பிரதேசத்தில் புதையுண்ட பழங்கால கப்பல் பாகங்களிலிருந்தே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தியோடொஸியஸ் கப்பல்துறைமுகம் என அறியப்பட்ட இத்துறைமுகளம் 4ஆம் நூற்றாண்டில் பைஷாந்தின் தியோடொஸியஸ் 1 எனும் பேரரசினால் கட்டப்பட்டது. அக்காலத்தில் முக்கிய வணிக துறைமுகமாக காணப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட டெப்லட் போன்ற அமைப்பு மரத்தினால் உருவாக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. நவீன 7 அங்குல டெப்லட் போன்று இருந்தாலும் தடிப்பு அதிகமா உள்ளது. இது கப்பலின் கெப்டனுடையதாக இருக்கும் என நம்பம்படுகின்றது.
5 படைகளாக காணப்படும் பழங்கால டெப்லட்டில் குறிப்புகளை பதிவு செய்ய மெழுகு பயன்படுத்தப்பட்டுள்ளதாம். கிரேக்க மொழியில் அதிலுள்ள குறிப்பு தற்போதும் பார்க்கக் கூடியதாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய எப்ஸுக்கு பதிலாக மரத்தில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.
இஸ்தான்புல் பல்கலைக்கழ கடல்சார் தொல்பொருள் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த கப்பல் 60 சதவீதம் பயன்படுத்தக்கூடிய விதத்தில் உள்ளது. இதனால் அக்கப்பலைத் திருத்தி 2015ஆம் ஆண்டில் மீண்டும் கடலில் செலுத்தப்படும் எனக் கூறப்படுகின்றது.
கிறைமியாவிலிருந்து கெர்சொனிஸஸ் எனுமிடத்துக்கு 9ஆம் நூற்றாண்டில் கருங்கடலினூடாக வர்த்தகப்பொருட்களுடன் சென்ற வேளையில் இக்கப்பல் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.